Thursday, March 12, 2009
ஈழப்படுகொலை இந்தியாவின் தூண்டுதலே : விக்ரமபாகு கருணாரட்ண செவ்வி !!!
ஈழப்படுகொலை இந்தியாவின் தூண்டுதலே : விக்ரமபாகு கருணாரட்ண செவ்வி
11-03-2009
பக்கம் 1 / 3
இந்திய அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் கிளர்ந்தெழ வேண்டும்:விக்கிரமபாகு கருணாரட்ண - ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றத்தை அனைத்துலக சமூகம் கிளர்ந்தெழுந்து கண்டிக்க வேண்டும் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருபவர்களில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவும் ஒருவர். ஜக்கிய தொழிலாளர் சம்மேளனம், காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு என்பவற்றின் போசகராகவும், இலங்கை தொடருந்து பணியாளர் சங்கத்தின் தலைவராகவும் விளங்கும் இவர் அண்மையில் நெதர்லாந்தின் அம்ஸ்ரர்டாம் நகருக்கு சென்றிருந்த போது சுவிசில் இருந்து வாரமிருமுறை வெளிவரும் 'நிலவரம்' வார ஏட்டுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
அந்த நேர்காணல் வருமாறு :
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மாநாடு நெதர்லாந்து அம்ஸ்ரர்டாம் நகரில் நடைபெற்ற போது இலங்கையின் தமிழர் தாயகத்தில் நடைபெறும் யுத்தம் தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகின்றோம். இது தொடர்பாக சற்று விளக்குவீர்களா?
ஆம், நான்காவது அகிலத்தின் கூட்டத்திலே தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு கோரும் தீர்மானமொன்றைக் கொண்டு வந்தேன். அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவுவதற்கான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியல் அமைப்பு ரீதியில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தேன்.
இந்தத் தீர்மானத்திற்கு கலந்து கொண்டோரிடம் இருந்து எத்தகைய ஆதரவு கிடைத்தது?
அங்குள்ள நிலமைகளைக் கேள்வியுற்று அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் ஏகமனதாக இந்தப் பிரேரணையை அங்கீகரித்தார்கள். தத்தம் நாடுகளில் இந்த விடயத்தை பல வழிகளிலும் முன்னெடுப்பதாகவும் கூறினர். அதேவேளை, இந்தத் தேசியப் பிரச்சினை தொடர்பான தரவுகளையும் விளக்கங்களையும் அறிந்து கொள்ள விரும்பினார்கள். அவர்களுக்கு சில விடயங்கள் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள விரும்பிய அதேவேளை, தங்கள் நாடுகளில் ஒருமைப்பாட்டு அமைப்புக்களை உருவாக்குவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்கள். ஐரோப்பா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான், தென்கிழக்காசிய நாடுகள் என்பவற்றில் இருந்து பிரதிநிதிகள் வருகை தந்து கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்தத் தீர்மானம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்?
இன்றைய நிலையில் அவர்கள் மடத்தனமாக கொலைகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களை அச்சுறுத்திப் பணிய வைத்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களும் தொழிற்சங்கங்களும் யுத்தத்துக்கு எதிராக பரப்புரைகளைத் தொடங்கினால் சில மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். உண்மையிலேயே மகிந்த இந்தியாவின் அழுத்த மற்றும் ஆதரவு காரணமாகவே இந்தப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இந்தியாதான் உண்மையான குற்றவாளி. அவர்கள்தான் இந்தச் சூழ்நிலையை உருவாக்கினார்கள். மகிந்த அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அவர்கள் மகிந்தவின் பின்னால் இருந்து கொண்டு இந்தச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள்.
நான் நினைக்கின்றேன்; இந்தியாவுக்கு ஒரு பொருண்மிய நிகழ்ச்சித் திட்டம் இருக்கின்றது. அவர்கள் வளங்களைக் கைப்பற்ற நினைப்பது தெளிவாகப் புரிகின்றது. இயற்கை வளங்களை மட்டுமன்றி மனித வளங்களையும் கைப்பற்ற அவர்கள் நினைத்திருக்கின்றார்கள். அதனாலேயே மகிந்தவை அவர்கள் இதற்கு நிர்ப்பந்தித்துள்ளார்கள்.
உலகம் இதனை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். மகிந்தவுக்கு உதவுவதை நிறுத்துமாறு உலக சமூகம் இந்தியாவுக்கு அழுத்தம் தர வேண்டும். ஆயுதங்கள் வெடி மருந்துகள், தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை என்பவற்றை வழங்குவதை நிறுத்துமாறு கோர வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலையே இந்தியா இவ்வாறு செயற்படக் காரணம் என சிலர் கூறி வருகின்றனரே?
ராஜீவ் காந்தி கொலை, பொதுமக்களைப் பொறுத்தவரை ஒரு விடயமாக உள்ளது உண்மையே. அதேவேளை ஆளும் பிராமண வர்க்கத்தினால் இதுவொரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே ராஜீவ் காந்தி கொலை ஒரு பிரதான காரணமாயிருந்தால் இன்று தமிழ் நாட்டில் நடக்கின்ற விடயங்கள் எவ்வாறு நடக்க முடியும்? தென்னிந்தியாவிலே மக்கள் உணர்வெழுச்சி கொண்டுள்ளனர். தங்களுக்குத் தாங்களே தீ முட்டிக் கொள்கின்றனர். எனவே, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு இதுவொரு பிரதான காரணம் எனக் கூறிவிட முடியாது. உண்மையில் பொருண்மியக் காரணங்களுக்காகவே இந்தியப் பூர்சுவாக்கள் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருண்மியக் காரணம் என நீங்கள் கூறுவதை சற்று விளக்க முடியுமா?
தென்கிழக்காசியாவின் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ஒரு திட்டம் அவர்களிடம் உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஸ், சிறிலங்கா, மாலைதீவு உட்பட அனைத்து பிரதேசமும் தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். அமெரிக்கா இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றது. தற்போதைய நிலையில் அமெரிக்காவும். இந்தியாவும் சிறந்த நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. மன்மோகன் சிங்கைப் பொறுத்தவரை ஆடையில் மாத்திரமே அவர் இந்தியர். நிஜத்தில் அவர் ஓர் உலக வங்கி நபர். அவர் நிஜமான அமெரிக்க மனோபாவம் உடைய ஒருவர். அவர் ஒபாமாவுக்கு ஆலோசனை வழங்கப் பொருத்தமானவர். புதிய திறந்த பொருளாதார விடயத்தில் அவர் ஒரு புலி. எனவே, அவர்கள்தான் இந்தச் சூழ்நிலையைக் கையாண்டு வருகின்றார்கள். இது அவர்களுடைய நிகழ்ச்சித் திட்டம். இந்திய ஆளும் வர்க்கத்தின் பொம்மையே மகிந்த.
சாதாரண சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி வந்த காலமொன்று இருந்தது. ஆனால், அது படிப்படியாகக் குறைந்து விட்டது. இந்நிலையில் கிட்டிய எதிர்காலத்தில் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிங்கள மக்களைத் திசை திருப்பி விட முடியும் என நினைக்கிறீர்களா?
பக்கம் 2 / 3
மக்கள் தலைவர்களையே பின்பற்றுகிறார்கள். மக்களால் தாமாகத் தீர்மானமெடுக்க முடியாது. 24 மணித்தியாலமும் தாங்கள் யுத்தத்தில் வெல்வதாகவும் அதற்கூடாகவே தமிழ் மக்களுடன் ஐக்கியத்தைப் பேண முடியும் எனவும் கூறும் போது சிங்கள மக்கள் அதனை நம்புகிறார்கள். மக்கள் சாதாரண வழிமுறைகளையே விரும்புகிறார்கள். சிக்கலானவற்றை அல்ல. இதன் அர்த்தம் மக்கள் இனவாதிகள் என்பதல்ல. அதனால்தான் நான் கொழும்பில் நடமாடக் கூடியதாக இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். மக்கள் இனவாதிகள் எனக் கூறப்படுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. உண்மையில் இலகுவான தீர்வுகள் உண்டென அவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமிழ் மக்கள் மத்தியிலே வாழ்ந்து வரும் புலிகள் கூடாதவர்கள் என அவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய தீய சக்திகளை அழித்து வருகின்றோம். அதற்கூடாக பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற செயற்கையான படம் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் நிலவும் வறுமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இலகுவான தீர்வுகளில் நம்பிக்கை கொள்ள வேண்டிய நிலமை உள்ளது.
மகிந்த சகோதரர்களால் எவ்வளவு காலத்திற்கு இந்த நிலமையில் நீடிக்க முடியும்?
அவர்களுடைய அபின் வேலை செய்யும் மட்டும். அபினால் நீண்ட காலம் செயற்பட முடியாது அல்லவா? அபின் என்பது 2, 3 மணி நேரமே போதை தரக்கூடிய ஒரு போதைவஸ்து. அந்தப் போதை தெளியும் போது, மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.
அது மலையக மக்களுடன் ஆரம்பித்து விட்டது எனவே எண்ணுகிறேன். அவர்கள் தொண்டமானிடம் இருந்து விலகி வருகின்றார்கள். அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தலில் அதனை அவதானிக்க முடிந்தது. தோட்டத் தொழிலாளர்கள் ஒரு சில நாட்களுக்கு தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களானால் அரசால் பதவியில் நீடிக்க முடியாது. மற்றைய துறைகளோடு ஒப்பிடுகையில் தோட்டத் தொழிற்துறை மிகவும் பலமானது. எமது தரப்புக்கு வரக் கூடிய மக்களை சேர்த்துக்கொண்டு நாம் முன்னோக்கி நடை பயில வேண்டும். நான் நினைக்கின்றேன் விடுதலைப் புலிகள் கூடத் தாக்குப் பிடிப்பர். அவர்கள் இலகுவில் தோற்கடிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் மீண்டும் பதிலடி தருவர். அவர்களுடைய மன உறுதி ஆயுதங்களையும் விடப் பலமானது. தென்னிந்தியாவில் உருவாகியுள்ள சூழ்நிலை கூட கவனிக்கத்தக்கது. இத்தகைய பின்னணியில் அனைத்துலக சமூகக் கண்ணைத் திறக்குமானால் நல்ல பலன் கிடைக்கும்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடங்க கட்டங்களில் இந்திய இடதுசாரிக் கட்சிகள் விலகியே இருந்தன. ஆனால், அண்மைக் காலத்தில் அவர்கள் மிகவும் உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்துக்கான காரணம் என்னவென நினைக்கின்றீர்கள்?
இது விடயத்தில் எங்களின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு வருடத்துக்கு முன்னர் நான்காவது அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இது ஒரு இனவாதப் பிரச்சினை அல்ல. இது ஒரு தேசியப் பிரச்சினை என்பதைப் புரியச் செய்தோம். இம்முறையும் இது தொடர்பில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
அது மட்டுமன்றி நான் ஜே.வி.பி. தொடர்பாக ஒரு நூலும் எழுதினேன். அதேவேளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (வலது மற்றும் இடது) ஜே.வி.பி. தொடர்பில் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தன. அவர்கள் தமது மாநாடுகளுக்குக் கூட ஜே.வி.பி.யை அழைத்திருந்தனர். விடுதலைப் புலிகளை தொடர்பாக ஜே.வி.பி. கூறுபவை சரியென அவர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், நாங்கள் அவர்களின் கண்களைத் திறந்தோம். ஜே.வி.பி.யின் கருத்துக்கள் இனவாத அடிப்படையிலானவை எனப் புரியச் செய்தோம். இது ஒரு குட்டிப் பூர்சுவா சிங்களத் தேசியக் கட்சி என்பதை விளக்கினோம். உலக மார்க்சியக் கண்ணோட்டம் வேறு விதமானது. அந்த அடிப்படையில் இந்திய இடதுசாரிகளுக்கும் விடயங்கள் புரியத் தொடங்கியது. இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இந்த வருடமும் கூட நான் சென்னை சென்றிருந்தேன். அங்கு சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.எம். ஆகிய கட்சிகளுடன் தொடர் கலந்துரையாடல்களை நடாத்தினேன். அவர்கள் தமது அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டார்கள். சி.பி.ஐ.-எம் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் சுயாட்சியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடுகின்றார்கள். அதேவேளை, சி.பி.ஐ. தமிழ் மக்களின் விவகாரம் சுயநிர்ணய உரிமையுடன் சம்பந்தப்பட்டது. தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட வேண்டும் என ஏற்றுக்கொண்டுள்ளது.
ஏனெனில் அவர்கள் மத்தியிலும் தேசியப் பிரச்சினை உள்ளது. தமிழ்நாட்டுத் தேசியம் உள்ளது. இந்தியாவினுடைய பார்ப்பனிய ஆசிய சிந்தனை புதிய உலகில் செல்லுபடியாகாது. ஆனால் ஒடுக்குமுறை ஆட்சியாளர்கள் அதனைப் பயன்படுத்துகிறார்கள். இது விடயத்தில் தா.பாண்டியன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். பாண்டியனுக்கு இது விடயத்தில் போதிய அறிவு உள்ளது. அவர்களுடனான கலந்துரையாடலின்போது அவருக்குரிய தெளிவைக் கண்டு கொள்ள முடிந்தது. எனவே இந்தப் போராட்டம் - தென்னிந்தியப் போராட்டம் - மிகவும் முக்கியமானது. இது தொடர வேண்டும். மத்திய அரசு பொய் சொல்லுகிறது. முழுக்க முழுக்கப் பொய். அவர்கள் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு வேறு கரிசனை உள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் என்ன? அவர்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளா?
பக்கம் 3 / 3
நான் நினைக்கின்றேன். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும், அவர்களின் பூர்சுவா குணாம்சத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. உலக முதலாளித்துவம் தமிழர்களுக்கு உதவி செய்யும் என நான் நினைக்கவில்லை. அமெரிக்க தாராளவாதம் அவர்களுக்கு உதவும் என நான் நினைக்கவில்லை. இந்தியா உதவும் என நான் நினைக்கவில்லை. தொழிலாளர்களும் சோசலிசமுமே இறுதியில் உதவப் போகின்றது.
புலிகளின் போராட்டம் வளைந்து கொடுக்காத போராட்டம். அவர்களின் எவருக்கும் தலை வணங்காத குணாம்சத்தை நான் மதிக்கிறேன். அவர்கள் தமது போராட்டத்தை உறுதியுடன் தொடர்கிறார்கள். தமிழர்களுக்காகக் குரல் தருவது இலகுவானது. ஆனால் அவர்களுக்காகப் போராடுவது கடினமானது. அந்த வகையில் விடுதலைப் புலிகளைப் பாராட்டுகிறேன். அதேவேளை, அவர்களுடைய முதலாளித்துவ சிந்தனைக்கு நான் எதிரானவன். குடிமக்கள் மீதான வன்முறைக்கு நான் எதிரானவன். இதற்கெதிரான அனைத்துலக அபிப்பிராயம் உள்ள போதிலும் ஆயுத ரீதியில் போராடுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை மறுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் என்பது குற்றமல்ல. ஆயுதப் போராட்டம் என்பது பயங்கரவாதமல்ல. தம்மைக் காத்துக் கொள்வதற்கு எந்தவொரு சமூகத்திற்கும் உரிமையுள்ளது.
அதேவேளை, பயங்கரவாதம் என ஐ.நா. சபையாலும் ஏனைய மனித உரிமைகள் அமைப்புக்களாலும் வரையறுக்கப் பட்டுள்ள விடயங்களை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தற்போது உழைக்கும் வர்க்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் உழைக்கும் வர்க்கத்துடனும் கம்யூனிஸ் கட்சியுடன் தொடர்பாடலுக்குத் தயாராக இருக்கின்றார்கள். எங்களுடனும் பேசத் தயாராக உள்ளனர். அவர்கள் என்னுடைய கட்டுரைகளையும் விமர்சனங்களையும் பிரசுரிக்கின்றார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் மக்களின் நலனிலும் அக்கறை கொண்டுள்ளார்கள். அவர்கள் மக்கள் ஆதரவை பெருமளவில் கொண்டுள்ளார்கள். 50, 60 ஆயிரம் தலையாட்டிகளை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவர முடியாது. ஆயிரம் இரண்டாயிரம் பேரை வேண்டுமானால் அழைத்து வர முடியும். ஆனால் 50, 60 ஆயிரம் பேரை அழைத்து வர முடியாது. அதனை - புலிகளின் சக்தியை - நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அங்கேதான் புலிகளின் பலம் உள்ளது. தற்போது அவர்கள் உழைக்கும் மக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இது வரவேற்கத்தக்கது.
உண்மையில் பா.நடேசன் எங்கள் கட்சியின் முன்னை நாள் உறுப்பினர். அவர் 10 வருடம் எமது கட்சியில் இருந்தார். அவர் ஒரு அரசியல் தலைமைத்துவத்தில் இருப்பது மகிழ்வைத் தருகின்றது. அவரிடம் அரசியல் அறிவு உள்ளது. நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களிடம் இருக்கும் அரசியல் அறிவு பயன் தரவல்லது. அந்த வகையில் நடேசனால் சிறந்த பாத்திரத்தை வகிக்க முடியும். அடுத்தவர் பரா, அவர் ஈரோசில் இருந்தவர். ஈரோஸ் ஒரு அரசியல் இயக்கம். அவருக்கும் குறிப்பிட்ட அரசியல் பயிற்சி இருக்கும்.
அவர்கள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முயற்சிக்க வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்டவர்களாக அவர்கள் விளங்க வேண்டும். உழைக்கும் மக்களின் குறைகளைக் கேட்க வேண்டும். அவ்வாறு இருந்தால் வெற்றி நிச்சயம்.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக எதனை முன்வைக்க நினைக்கின்றீர்கள்?
சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்திய வண்ணம் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ முடியும் என நான் நம்புகின்றேன். அது தன்னிச்சையானதாக இருக்க வேண்டும். பலவந்தமானதாக இருக்கக் கூடாது.
சுயாட்சி வழங்கப்பட்டு, காவல்துறை அதிகாரம் தரப்பட்டு அந்த அடிப்படையில் நாம் இணைந்து வாழ முடியும். இதுவே என் அபிப்பிராயம். அதேவேளை தனிநாடு அமைப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதுவே தமிழ் மக்களின் விருப்பமாக இருந்தால், அதற்கு நாங்கள் ஆதரவு தந்தேயாக வேண்டும்.
ஆனால், அதுவே ஒரேயொரு தீர்வாக இருக்குமானால் நான் கவலைப்படுவேன். இன்னமும் கூட கஸ்டப்படும் சிங்கள-தமிழ் உழைக்கும் மக்கள் ஐக்கியப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே நான் நம்புகிறேன். ஒரு சில சுரண்டல்வாதிகள் மாத்திரமே இந்த ஐக்கியத்துக்கு எதிரானவர்கள். அவர்களை முறியடித்து கௌரவத்துடன் கூடிய தன்னிச்சையான ஐக்கியத்தை எட்ட முயற்சிக்க வேண்டும். அதுவே எனது தீர்வு.
நீங்கள் கூறியதன் பிரகாரம் இந்தியா போரில் ஈடுபட்டு வருகின்றது. அதேவேளை சில வெளிநாடுகள் யுத்தத்துக்கு முடிவுகாண விரும்புகின்றன. எனினும் இந்தியா அதற்குத் தடையாக இருப்பதாக அவை கருதுகின்றன. இத்தகைய நிலையில் இந்தியாவைப் புறந்தள்ளி மேற்குலக நாடுகள் யுத்தத்தை நிறுத்த முடியும் எனக் கருதுகின்றீர்களா?
சாத்தியம். அதனாலேயே நாங்கள் நான்காம் அகிலத்தில் இத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினோம். இதில் கலந்து கொண்டவர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆளும் வர்க்கத்துக்கு அழுத்தம் தர வேண்டும். அவர்களின் கண்களைத் திறக்கச் செய்ய வேண்டும். இந்தியா உட்பட.
இந்தியா மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றத்தைப் புரிந்து வருகின்றது. இந்த வேளையில் உலக சமூகம் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். இந்திய மக்கள் குறிப்பாகத் தென் இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்து ஆளும் வர்க்கத்துக்கு அழுத்தம் தர வேண்டும். அதற்கூடாக இந்தக் குற்றச் செயலில் இந்தியா ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.
வன்னியில் நடைபெறும் கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் எத்தகைய ஆலோசனையை வழங்க விரும்புகின்றீர்கள்?
இது ஒரு நல்ல கேள்வி. அவர்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் பெறுமதியானவை. ஆனால், அவர்கள் உழைக்கும் வர்க்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்க இயக்கத்துடன் அவர்கள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களுடன் பிணைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். முற்போக்கு புத்திஜீவிகளை அணுக வேண்டும். அவர்களின் உதவியைப் பெற வேண்டும். அமெரிக்காவில் நொம் சொஸ்கி போன்று பெல்ஜியத்திலே எரிக் ருசான்ட் போன்று பல புத்திசாலிகள் இருக்கிறார்கள். பலமான தொழிற்சங்கங்கள் உள்ளன. அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
அது இலகுவானதல்ல முதற்தடவையில் அவர்கள் எமக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் சென்று வரலாற்றை விளங்கப்படுத்துங்கள். தொடர்பை ஏற்படுத்துங்கள். விளக்கங்களை வழங்குங்கள்.
பாலஸ்தீன இயக்கத்தை, வியட்நாமிய இயக்கத்தை உதாரணமாகக் கொள்ள வேண்டும். அவர்களை அதனையே செய்தார்கள். ஒருமைப்பாட்டு இயக்கங்களை அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அமைத்தார்கள். ஆயிரக்கணக்கான தொழிற் சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாக வந்தன. அங்கேதான் சக்தி உள்ளது. எனவே அத்தகையோரை அணுகுவது அவசியம்.
மேல் மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட இருக்கின்றீர்கள். எனவே எமது பத்திரிகையின் ஊடாக கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு நீங்கள் கூற விரும்புகின்ற செய்தி என்ன?
நான் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். நான் முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தேன். அப்போது என்னால் தமிழ் மக்களுக்கு அதிகமாகச் செய்ய முடிந்தது. இன்றைய நிலையில் எனது தோல்வி தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும். எனவே நான் தெரிவு செய்யப்படுவதை தமிழ் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் எனது குரல் ஓங்கி ஒலிக்கும். எனது குரலுக்கு மேலும் சக்தி கிடைக்கும்.
நான் தோற்றுவிட்டால் மூவாயிரம் நான்காயிரம் வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடையும் இவரின் கருத்துக்கள் பயனற்றவை. இவருக்கு தமிழ் மக்களே ஆதரவு தரவில்லை. இவரை எவருமே தமிழ் மக்கள் கூட மதிப்பில்லை எனப் பரிகசிப்பார்கள். எனவே, இதனை நீங்கள் கேட்பதற்கு விரும்பவில்லை என்றால் என்னை வெல்லச் செய்ய வேண்டும். எனக்கு கிடைக்கும் பலம் உங்கள் விடுதலைக்கே உதவும். உங்களுடைய போராட்டத்துக்கு உங்கள் கௌரவத்துக்கு உதவும்.
இதுவே என்னுடைய செய்தி. இது உங்கள் கடமை. நான் என்னுடைய கடமையைச் செய்கின்றேன். நான் 1974-ல் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகச் சளைக்காது போராடி வருகின்றேன். எனக்கு எந்தவொரு பலமும் இருக்கவில்லை. நான் தொடக்கத்தில் எந்தவித ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. நான் எங்கு சென்றாலும் நான் கூறுகின்ற விடயத்துக்காக உறுதியுடன் செயற்படுகின்றேன். நான் பலமுள்ளவனாக இருந்தால் உங்களுடைய போராட்டமே வெற்றி பெறும் என்றார் விக்கிரமபாகு கருணாரட்ன.
courtesy:adhikaalai.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment