HOW TO ACHIEVE A BETTER WORLD OR THE BEST WORLD...???

*SAY NO TO: VIOLENCE/BRUTALITY/KILLINGS/RAPES/TORTURE!
*SAY NO TO:
CORRUPTION/FAVORITISM/DISCRIMINATION!
*SAY NO TO:
IGNORANCE/UNEMPLOYMENT/POVERTY/HUNGER/
DISEASES/OPPRESSION/GREED/JEALOUSY/ANGER/
FEAR, REVENGE!

Wednesday, March 18, 2009

தலைநகரில் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்வதே எமது பிரதான நோக்கமாகும்!!!

தலைநகரில் எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்வதே எமது பிரதான நோக்கமாகும்
[18 - March - 2009]

* மனோகணேசன் கூறுகிறார்
எந்தவொரு பெரும்பான்மைக் கட்சியும் ஆட்சி செய்யும் பொழுது எமது இனத்தின் உரிமைகளை விரும்பி வழங்கும் சரித்திரம் இந்நாட்டில் கிடையாது. எனவே இன்றைய நெருக்கடிமிக்க அரசியல் சூழ்நிலையில் தலைநகரத்திலே எமது தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி, அதை அதிகரித்துக்கொள்வதுதான் எமது பிரதான நோக்கங்களாக இருக்கவேண்டும். அரசியல் பிரதிநிதித்துவத்தை பறிகொடுத்துவிட்டு துன்பம் வரும்பொழுது செய்வதறியாமல் திகைத்து நிற்பதென்பது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானதாகுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஜ.ம.மு. வேட்பாளர்களின் தென்கொழும்பு தேர்தல் பிரசாரக் கூட்டம் முன்னணியின் பாமன்கடை தென்கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்றபொழுது மனோகணேசன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

ஒரு தமிழரும் ஒரு சிங்களவரும் தெரிவுசெய்யப்படுவதற்காக ஆரம்பத்தில் தென்கொழும்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருபோதும் இங்கே தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. அதேபோல் மத்திய கொழும்பு தொகுதிகளிலும் ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் ஒரு சிங்களவரும் தெரிவுசெய்யப்படுவதற்காக மூன்று அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டது. இங்கேயும் நீண்ட நெடுங்காலமாக தமிழர்கள் தெரிவுசெய்யப்படாமல் மாற்று இனத்தவர்களே தேர்தல்களில் தெரிவானார்கள். தமிழ் மக்கள் சிந்தித்து தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பொறுப்புடன் வாக்களிக்காத காரணத்தினாலேயே இத்தகைய நிலைமை உருவானது.

இன்று கொழும்பு மாவட்டத்திலே குறைந்தபட்சமாக மூன்று தமிழ் மாகாணசபை உறுப்பினர்களையும் எதிர்காலத்தில் மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவுசெய்து கொள்ளக்கூடிய வாய்ப்பை நாம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளோம். எமது ஜனநாயக மக்கள் முன்னணி கடந்த பல்லாண்டுகளாக கொழும்பு மாவட்டத்திலே நடத்தி வந்த தனித்துவ அரசியல் காரணமாக நாம் இன்று வளர்ச்சியடைந்துள்ளோம்.

எமது இனத்தவர்களின் வாக்குகளைப் பயன்படுத்தி தம்மை வளர்த்துக்கொண்ட பெரும்பான்மை அரசியல்வாதிகளின் மத்தியிலே எமது வாக்குகளை எம்மவர்களுக்குப் பயன்படுத்தி எமது இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நாம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளோம்.

இந்நிலையில் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவதற்கு தலைநகர தமிழ் வாக்காளர்கள் தயாராகவேண்டும். அனைத்து பதிவுசெய்யப்பட்ட தமிழ் வாக்காளர்களும் வாக்களிப்பை ஒரு கடமையாகக் கருதி வாக்களிக்க வேண்டும். வாக்களிக்கும் அனைத்து தமிழ் வாக்காளர்களும் யானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். யானை சின்னத்திற்கு வாக்களிக்கும் தமிழ் வாக்காளர் ஒவ்வொருவரும் தமது விருப்பு வாக்குகள் மூன்றையும் எமது மூன்று வேட்பாளர்களுக்கும் வழங்கவேண்டும். இதுவே எமது பிரதான தேர்தல் பிரசார செய்தியாக இருக்கவேண்டுமென்றும் தெரிவித்தார்.

Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com

No comments: